வாடகைக்கு வீடு தேடும் நடைமுறை தற்போது ஆன்லைன் தளங்கள் மற்றும் செயலிகள் மூலம் எளிமையானதாக மாறிவிட்ட நிலையில், துரதிர்ஷ்டவசமாக இதைப் பயன்படுத்தி மோசடி செய்யும் கும்பல் புதிய உத்திகளைக் கையாளத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் பெங்களூருவில் ஒரு புகழ்பெற்ற ஆன்லைன் தளம் வழியாக வாடகைக்கு வீடு தேடிய ஒருவருக்கு நேர்ந்த மோசடி முயற்சி, இந்த அபாயத்தை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த மோசடியாளர்கள், நகரத்தின் முக்கியப் பகுதிகளில் அமைந்துள்ள, நீச்சல்குளம் மற்றும் உடற்பயிற்சிக் கூடம் போன்ற வசதிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு, சந்தை விலையைவிட மிகவும் குறைந்த வாடகையைக் குறிப்பிட்டு விளம்பரம் செய்கின்றனர். உதாரணமாக, ஜே.பி. நகர் போன்ற பகுதிகளில் ஒரு 2BHK வீட்டிற்கு வெறும் ₹15,000 வாடகை என்றும், வீட்டிலேயே டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் இருக்கும் என்றும் கூறுவதன் மூலம் மக்களைக் கவர்ந்திழுக்கின்றனர்.
இத்தகைய கவர்ச்சியான விளம்பரங்களைப் பார்த்து உரிமையாளர் எனப் பேசும் நபரைத் தொடர்பு கொள்ளும்போதுதான் நூதன மோசடி அரங்கேறுகிறது. அந்த நபர், “இது ஒரு கேட்டட் சொசைட்டி (Gated Society) என்பதால், நீங்கள் நேரடியாக வந்து வீட்டைப் பார்க்க முடியாது. நீங்கள் உள்ளே வர வேண்டுமென்றால், அதற்கென ஒரு ‘ஐடி கார்டு’ உருவாக்கித் தர வேண்டும்” என்று கூறுகிறார். இந்த ஐடி கார்டை உருவாக்க வேண்டும் என்ற பெயரில், வாடகைக்கு வர விரும்பும் நபரின் புகைப்படம், ஏதேனும் ஒரு அரசு அடையாள அட்டை (ஆதார் அல்லது வாக்காளர் அட்டை) மற்றும் ஐடி கார்டை உருவாக்குவதற்கான கட்டணமாக ₹2,500 பணத்தையும் முன்கூட்டியே அனுப்பும்படி கேட்கின்றனர். இந்தத் தொகை, வீட்டைப் பார்த்துச் சென்றவுடன் உங்களுக்குத் திரும்ப அனுப்பப்பட்டுவிடும் என்றும் அவர்கள் பொய் வாக்குறுதி அளிக்கின்றனர்.
உண்மையில், இந்த மோசடியில் சிக்கிப் பணத்தை அனுப்பிய பிறகு, மோசடியாளர்கள் எந்த ஐடி கார்டையும் கொடுக்க மாட்டார்கள், வீட்டைப் பார்க்க அனுமதிக்கவும் மாட்டார்கள். மேலும், நீங்கள் பகிர்ந்துள்ள உங்கள் அடையாள அட்டையின் தகவலை வைத்து வேறு நிதி மோசடிகளில் ஈடுபடவும் அதிக வாய்ப்புள்ளது. எனவே, வாடகைக்கு வீடு தேடும்போது, மிகக் குறைந்த வாடகை, அல்லது வீட்டைப் பார்ப்பதற்கு முன்பாகவே பணம் அல்லது தனிப்பட்ட ஆவணங்களைக் கேட்பது போன்ற விஷயங்களில் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாடகைக்கு வீடு தேடுபவர்களை குறிவைத்து நடக்கும் நூதன மோசடி! மக்களே உஷார் – புதிய ஆன்லைன் யுக்தி!


