டிசம்பர் முதல் ஆர்.டி.ஓ அலுவலங்களில் சொந்தப் பயன்பாட்டு வாகனங்களைப் பதிவு செய்வதில் பெரும் சலுகையை மோட்டார் வாகனத் துறை வழங்கியுள்ளது.
தமிழகத்தில் தினமும் ஏறத்தாழ 8,000 வாகனங்கள் புதிதாக வாங்கப்படுகின்றன. இந்த வாகனங்கள் அனைத்தும் தமிழக மோட்டார் வாகனத்துறையில் பதிவு செய்யப்பட வேண்டியது அவசியமாக உள்ளது. இதற்காக அனைத்து வாகனங்களையும் ஆர்.டி.ஓ அலுவலங்கங்களுக்கு கொண்டு வர வேண்டும் என்னும் வழக்கம் இதுவரையில் நடைமுறையில் இருந்தது.தமிழகத்தில் 150க்கும் குறைவான ஆர்,டி,ஓ அலுவலகங்கள் மட்டுமே உள்ளன. எனவே ஒவ்வொரு அலுவலகத்திலும் ,அதிக அளவிலான வாகனங்களைப் பதிவு செய்வதால் அடிக்கடி காலதாமதம் ஏற்படும் நிலை இருந்தது.
இதற்கான தீர்வாக, நாளை, டிசம்பர் 1 முதல் சொந்தப் பயன்பாட்டுக்காக வாங்கப்படும் புதிய வாகனங்களின் பதிவுகளை, வாகனத்தை விற்பனை செய்யும் டீலர்களே மேற்கொள்ளலாம் என்னும் அறிவிக்கையை மோட்டார் வாகனத்துறை ஆணையாளர் கஜலட்சுமி ஆர்.டி.ஓ அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ளார்.
தினமும் 3000 முதல் 4000 சொந்தப் பயன்பாட்டுக்கான வாகனங்கள் பதிவு செய்யப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிவிப்பு மூலம், அத்தகைய வாகனங்கள் ஆர்.டி.ஓ அலுவலகம் வரும் தேவை தவிர்க்கப்படுகிறது.இது புதியதாக வாகனம் வாங்குபவர்களது நேர விரயத்தினையும், சிரமத்தினையும் வெகுவாக குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


