மகளிர் உரிமைத் தொகை 2.0: வெள்ளிக்கிழமை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!

தமிழ்நாடு அரசின் பிரதான திட்டமான மகளிர் உரிமைத் தொகை திட்டம், தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1,000 வழங்கி வருகிறது. 2023 செப்டம்பரில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பயனடைந்து வருகின்றனர். புதிதாக ரேஷன் அட்டை பெற்றவர்கள் மற்றும் தகுதி இருந்தும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு கேட்டு எதிர்பார்த்திருந்த நிலையில், தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களை நடத்தியது. இந்த முகாம்கள் மூலம் லட்சக்கணக்கான பெண்கள் மகளிர் உரிமைத் தொகை வேண்டி விண்ணப்பம் செய்தனர்.

இரண்டாம் கட்ட திட்டத்தின் தொடக்கம்
புதிதாக விண்ணப்பம் செய்தவர்களில் தகுதி வாய்ந்தவர்களைத் தேர்ந்தெடுக்க, அரசு அதிகாரிகள் நேரடியாகக் களத்திற்கே சென்று ஆய்வு நடத்தினர். தகுதி வாய்ந்த பெண்களுக்கு மட்டுமே உரிமைத் தொகை கிடைக்க வேண்டும் என்பதில் அரசு கவனமாக இருக்கிறது. இதற்காகத் தகுதிகளிலும் சில தளர்வுகளை அரசு கொண்டு வந்தது. அந்த வகையில், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கான மகளிர் உரிமைத் தொகை வழங்கும் நிகழ்ச்சி நாளை (வெள்ளிக்கிழமை) நடக்க இருக்கிறது.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் இரண்டாம் கட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்ட பெண்களுக்கு அது தொடர்பான குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருகின்றன. திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் ₹1,000 நேரடியாக வரவு வைக்கப்படும். தேர்வு செய்யப்படாத நபர்களுக்கு, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட காரணம் என்ன என்பது குறுஞ்செய்தியில் அனுப்பி வைக்கப்படும்.