தெலுங்கானா அரசின் பலே திட்டம்! கிக் ஊழியர்களுக்கான சட்ட மசோதா தாக்கல்: 4 லட்சம் ஊழியர்களுக்கு சமூகப் பாதுகாப்பு உறுதி!

இந்திய சப்ளை செயினில் முக்கிய அங்கமாக விளங்கும் கிக் ஊழியர்களின் (Gig Workers) நலனைப் பாதுகாக்க, தெலுங்கானா மாநில அரசு நேற்று (நவம்பர் 18, 2025 அன்று வெளியான செய்திப்படி) ஒரு முக்கியமான சட்ட மசோதாவைத் தாக்கல் செய்துள்ளது. இது அம்மாநிலத்தில் உள்ள 4 லட்சத்திற்கும் அதிகமான கிக் ஊழியர்கள் மற்றும் டெலிவரி பணியாளர்களுக்குப் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது.

ராஜஸ்தானுக்குப் பிறகு, இந்தியாவில் கிக் ஊழியர்களுக்கான சட்டத்தை இயற்ற கர்நாடகா, பீகார், ஜார்கண்ட், தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் மசோதாவைத் தாக்கல் செய்து, இறுதி ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றன.

தெலுங்கானா அரசின் புதிய மசோதாவின் முக்கிய அம்சங்கள்

தெலங்கானா அமைச்சரவையில் தெலங்கானா கிக் மற்றும் பிளாட்பார்ம் தொழிலாளர்கள் சட்டம் 2025′ மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஸ்விக்கி, ஸொமாட்டோ, Blinkit, உபேர், ஓலா, அமேசான் ஃப்ளெக்ஸ் போன்ற ஆன்லைன் நிறுவனங்களில் பகுதி நேரம் வேலை செய்யும் லட்சக்கணக்கான ஓட்டுநர்கள் மற்றும் டெலிவரி ஊழியர்களுக்கு இது பொருந்தும்.

1. 20 உறுப்பினர் நல வாரியம்

இந்த மசோதாவின்படி, தொழிலாளர்கள், நிறுவனங்கள் மற்றும் அரசு அதிகாரிகள் சார்பில் 20 உறுப்பினர்கள் கொண்ட நிர்வாகக் குழு அமைக்கப்படும்.
அனைத்து கிக் தொழிலாளர்களும் இந்த வாரியத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் பதிவு செய்தால் மட்டுமே அவர்களுக்கு நலவாரிய நிதி, சமூகப் பாதுகாப்பு மற்றும் காப்பீடு உள்ளிட்ட திட்டங்கள் கிடைக்கும்.
தொழிலாளர்கள் தங்கள் குறைகள் மற்றும் பிரச்சினைகளை இந்த வாரியத்தில் புகார் அளித்து நிவாரணம் பெறலாம்.

2. சிறப்பு நல நிதி (Welfare Fund)

தொழிலாளர்களுக்காக ஒரு சிறப்பு வெல்ஃபேர் அமைப்பு (Welfare Fund)’ உருவாக்கப்படும்.
இந்த நிதியானது நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கப்படும் நலக் கட்டணம், அரசு மானியம் மற்றும் நன்கொடைகள் மூலம் சேர்க்கப்படும்.
இந்த நிதியிலிருந்து தொழிலாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு விபத்தில் இறப்பு நிவாரணம் மற்றும் இதர நலத்திட்டங்கள் வழங்கப்படும்.

3. அல்காரிதம் வெளிப்படைத்தன்மை

ஆன்லைன் நிறுவனங்கள் பயன்படுத்தும் சேவைத் தளத்தின் அல்காரிதம் (Algorithm)எப்படி வேலையை ஊழியர்களுக்கு ஒதுக்கீடு செய்கிறது, ஊக்கத்தொகை (Incentive) எப்படி கணக்கிடப்படுகிறது, மற்றும் தானியங்கி முடிவுகள் ஒரு ஊழியரின் ஊதியத்தை எப்படிப் பாதிக்கின்றன என்பதைத் தொழிலாளர்களுக்குத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும்.
முக்கியமான தகவல்கள் தொழிலாளர்கள் புரிந்துகொள்ளும் மொழிகளில்வழங்கப்பட வேண்டும்.
4. புகார் தீர்வு வசதி மற்றும் பணி நீக்கக் கட்டுப்பாடு

100-க்கும் மேற்பட்ட கிக் தொழிலாளர்கள் உள்ள நிறுவனங்கள் உள்நாட்டுச் சச்சரவுத் தீர்வுக் குழுவை (Internal Dispute Resolution Committee) அமைக்க வேண்டும்.
தவறு செய்யாத தொழிலாளர்களைப் பணி நீக்கம் செய்வதற்கு ஏழு நாட்களுக்கு முன்னறிவிப்பு கொடுக்க வேண்டும் என்ற புதிய கட்டுப்பாடும் மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளது.

5. விதிமீறல்களுக்கு அபராதம்

அரசு விதிக்கும் நலக் கட்டணத்தைச் செலுத்தத் தவறினால், முதல் விதிமீறலுக்கு ₹50,000 வரையும், அடுத்தடுத்து நடக்கும் விதிமீறல்களுக்கு ₹2 லட்சம் வரையிலும் அபராதம் விதிக்கப்படும்.

இதுவரை எந்தவிதமான சமூகப் பாதுகாப்பும் இல்லாமல் இருந்த கிக் தொழிலாளர்களுக்கு, இந்த மசோதா ஒரு பெரிய மாற்றத்தையும், பாதுகாப்பையும் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.