இந்தியாவின் மிகப்பெரிய பங்கு வர்த்தக தரகு நிறுவனமான ஜெரோதா (Zerodha), விரைவில் தனது வாடிக்கையாளர்கள் அமெரிக்கப் பங்குகளில் (US Stocks) நேரடியாக முதலீடு செய்யும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
ஜெரோதாவின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) நிதின் காமத் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இதன் முக்கிய அம்சங்கள்
இந்த திட்டம் அடுத்த காலாண்டிற்குள் (Next Quarter) தொடங்கப்படும் என்று நிதின் காமத் கூறியுள்ளார்.
இந்த புதிய வசதி GIFT City கட்டமைப்பின் கீழ் உருவாக்கப்பட்டு வருகிறது. இது சர்வதேச நிதி சேவைகள் மைய ஆணையத்தால் (IFSCA) கட்டுப்படுத்தப்படுகிறது. இது வெளிநாட்டு முதலீடுகளுக்குத் தேவையான சட்டத் தெளிவை வழங்குகிறது.
இந்த புதிய திட்டத்தின் கீழ், ஜெரோதா நிறுவனம் இந்தியா ஐஎன்எக்ஸ் குளோபல் அக்சஸ் (India INX Global Access) மற்றும் என்எஸ்இ-ஐஎக்ஸ் அன்ஸ்பான்சர்டு டெபாசிட்டரி ரசீதுகள் (NSE-IX Unsponsored Depository Receipts – UDRs) போன்ற GIFT City தளங்களைப் பயன்படுத்தி முதலீடுகளை எளிதாக்கத் திட்டமிட்டுள்ளது.
பயனர்களுக்கு எளிமையான மற்றும் இலகுவான வர்த்தக அனுபவத்தை வழங்குவதே ஜெரோதாவின் குறிக்கோள் என்று நிறுவனத்தின் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரி கைலாஷ் நாத் தெரிவித்துள்ளார்.
ஜெரோதா நிறுவனம் முதன்முதலில் 2020 ஆம் ஆண்டில் அமெரிக்கப் பங்குகளில் முதலீடுகளை வழங்கத் திட்டமிட்டது. எனினும், COVID-19 பெருந்தொற்று மற்றும் வெளிநாட்டுப் பணம் அனுப்பும் விதிமுறைகள் தொடர்பான சிக்கல்கள் காரணமாக அத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.
போட்டியாளர்கள்: ஏஞ்சல் ஒன், ஐஎன்டிமணி, எச்டிஎஃப்சி செக்யூரிட்டீஸ் மற்றும் க்ரோ உள்ளிட்ட பல இந்திய தரகு நிறுவனங்கள் ஏற்கனவே அமெரிக்கச் சந்தைகளில் முதலீடுகளை வழங்கி வருகின்றன.
பல ஆண்டுகளாக நிலையான வளர்ச்சியடைந்த ஜெரோதாவின் வருவாய் மற்றும் லாபம், நிதியாண்டு 2025-இல் 15% குறைந்து, வருவாய் ₹8,500 கோடியாகவும், நிகர லாபம் ₹4,200 கோடியாகவும் குறைந்தது. இந்த நிதிச் சரிவுக்கு மத்தியில், ஜெரோதா இந்த புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.


