அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி டெக் நிறுவனங்களின் கவனம் தற்போது இந்தியாவின் மீது தீவிரமாகத் திரும்பியுள்ளது. கூகுள், மைக்ரோசாப்ட், இன்டெல் மற்றும் காக்னிசன்ட் போன்ற உலகளாவிய நிறுவனங்களின் தலைவர்கள் அடுத்தடுத்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து, இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தங்கள் உறுதிப்பாட்டைத் தெரிவித்துள்ளனர். இந்த நிறுவனங்கள் இந்தியாவை ஒரு சந்தையாக மட்டும் பார்க்காமல், தங்களின் முக்கியமான டெக் மற்றும் உற்பத்தி மையமாக மாற்ற முன்வந்துள்ளன. இதன் மூலம், ஏஐ (AI) மையமாகவும், கிளவுட் உள்கட்டமைப்பு, டேட்டா மையம், செமி கண்டக்டர் மையமாகவும் இந்தியா உருவாக உள்ளது.
கூகுள், மைக்ரோசாப்ட் ஆகியவற்றின் பிரம்மாண்ட முதலீடுகள்
இந்தியா மீது சர்வதேச நிறுவனங்கள் கொண்டுள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆசியாவிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய முதலீட்டை அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சத்ய நாதெல்லா, இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப எதிர்காலத்துக்குத் தேவையான உள்கட்டமைப்பு மற்றும் திறன்களை உருவாக்குவதற்காக ₹1.57 லட்சம் கோடி (17.5 பில்லியன் டாலர்) அளவுக்கு முதலீடு செய்ய உறுதியளித்துள்ளார். இவருக்கு முன்னதாக, கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட், 15 பில்லியன் டாலர்கள் முதலீட்டில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அமெரிக்காவுக்கு வெளியே தனது மிகப்பெரிய ஏஐ டேட்டா மையத்தை அமைக்கப் போவதாக அறிவிப்பு வெளியிட்டது.
செமிகண்டக்டர் மற்றும் ஏஐ பிரிவில் பங்குதாரர்கள்
இதேபோல, இண்டெல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி Lip-bu Tan, நாட்டின் செமி கண்டக்டர் உற்பத்தி பிரிவில் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்வதாக பிரதமர் மோடியிடம் உறுதியளித்தார். இது தொடர்பாக இன்டெல் நிறுவனம் டாடா குழுமத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளது. மேலும், காக்னிசன்ட் தலைமை அதிகாரிகளும் பிரதமர் மோடியைச் சந்தித்து, இந்தியாவின் பல்வேறு பிரிவுகளிலும் ஏஐ தொழில்நுட்பத்தை அமல்படுத்துவதில் தங்கள் பங்களிப்பு குறித்து வாக்குறுதி அளித்துள்ளனர். உலக நாடுகள் இந்தியா மீது வைத்துள்ள இந்த நம்பிக்கையை இந்திய இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தியாவுக்கு அடித்தது ஜாக்பாட்: டெக் நிறுவனங்களின் மிகப்பெரிய முதலீடு ஏன்?


