கோஃபோர்ஜின் மெகா டீல்: அமெரிக்காவின் ‘என்கோரா’ நிறுவனத்தை ரூ.17,032 கோடிக்குக் கைப்பற்றியது!

இந்திய ஐடி சேவைத் துறையில் சமீபகாலமாக அமெரிக்க நிறுவனங்களைக் கைப்பற்றும் போக்கு அதிகரித்து வருகிறது. டிசிஎஸ் நிறுவனம் சமீபத்தில் இரண்டு அமெரிக்க நிறுவனங்களை வாங்கியதைத் தொடர்ந்து, தற்போது இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான கோஃபோர்ஜ் (Coforge), சிலிக்கான் வேலி-யைத் தலைமையிடமாகக் கொண்ட என்கோரா (Encora) நிறுவனத்தை 2.35 பில்லியன் டாலர் (சுமார் ரூ.17,032 கோடி) மதிப்பில் கைப்பற்றியுள்ளது. இந்த மெகா ஒப்பந்தம் பணமாக வழங்கப்படாமல், முழுவதுமாகப் பங்கு மாற்று முறையில் (Share-Swap) நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக, கோஃபோர்ஜ் நிறுவனம் 9.38 கோடி பங்குகளை வழங்க உள்ளது, இதன் மூலம் என்கோரா பங்குதாரர்கள் கோஃபோர்ஜ் நிறுவனத்தில் 21.25 சதவீதப் பங்குகளைக் கொண்டிருப்பார்கள்.

வருவாய் இலக்கு மற்றும் செயற்கை நுண்ணறிவுத் துறையில் வளர்ச்சி
இந்த இணைப்பின் மூலம் கோஃபோர்ஜ் நிறுவனம் வரும் 2027 நிதியாண்டில் 2.5 பில்லியன் டாலர் வருவாயை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதில் ஏஐ (AI) என்ஜினியரிங், கிளவுட் மற்றும் டேட்டா சேவைகள் முக்கியப் பங்கு வகிக்கும். குறிப்பாகச் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தயாரிப்பு என்ஜினியரிங் சேவைகள் மூலம் மட்டும் 1.25 பில்லியன் டாலர் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் டிஜிட்டல் என்ஜினியரிங் மற்றும் ஏஐ தொழில்நுட்பத் துறையில் உலகளவில் ஒரு வலுவான சக்தியாக கோஃபோர்ஜ் உருவெடுக்கும்.

அமெரிக்க விசா கட்டுப்பாடுகளைச் சமாளிக்கப் புதிய உத்தி
அமெரிக்காவில் எச்-1பி விசா கட்டுப்பாடுகள் அதிகரித்து வரும் சூழலில், அங்கு ஏற்கனவே இயங்கி வரும் நிறுவனங்களை வாங்குவது இந்திய ஐடி நிறுவனங்களுக்கு ஒரு பாதுகாப்பான உத்தியாகப் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் விசா சிக்கல்கள் இன்றி அமெரிக்க வர்த்தகத்தைத் தடையின்றித் தொடர முடியும். இந்தக் கையகப்படுத்தல் மூலம் கோஃபோர்ஜ் நிறுவனம் ஒரு மாபெரும் ஏஐ சேவை நிறுவனமாக மாறும் எனத் தொழில் துறை வல்லுநர்கள் கருதுகின்றனர்.