டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை நீண்ட காலத்திற்குத் தக்கவைத்துக்கொள்ளவும், நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சியை உறுதிப்படுத்தவும், அதன் பங்குதாரர்கள் எலான் மஸ்க்-கிற்கு 1 டிரில்லியன் டாலர் (தோராயமாக ₹88 லட்சம் கோடி) மதிப்பிலான சம்பளத் தொகுப்புக்கு நவம்பர் 6, 2025 அன்று ஒப்புதல் அளித்துள்ளனர்.
இந்த மாபெரும் தொகையைப் பெற, எலான் மஸ்க் 10 ஆண்டுகளுக்குள் (2035 வரை) டெஸ்லா நிர்வாகம் நிர்ணயித்த, எட்ட முடியாத அளவு சவாலான 12 வர்த்தக இலக்குகள் மற்றும் 12 நிதியியல் இலக்குகளை அடைய வேண்டும்.
சம்பளத் தொகுப்பின் வடிவமைப்பு
பங்கு ஒதுக்கீடு: மஸ்க் ஒவ்வொரு இலக்கையும் அடைந்தால், அவருக்கு டெஸ்லா நிறுவனத்தின் 1% பங்குகள் வீதம், மொத்தம் 12% பங்குகள் வழங்கப்படும்.
இறுதி இலக்கு: தற்போது 13% பங்குகளை வைத்திருக்கும் மஸ்க், இந்த 12 இலக்குகளையும் அடைந்தால், அவர் மொத்தம் 25% பங்குகளைப் பெற்று, டெஸ்லா நிர்வாகத்தில் வாக்களிக்கும் உரிமையில் அதிகாரம் பெறுவார்.
சம்பளம் இல்லை: இந்த 10 வருட காலத்திற்கு எலான் மஸ்க்-கிற்கு எவ்வித அடிப்படைச் சம்பளமோ, பிற பங்கு ஒதுக்கீடுகளோ இல்லை என்பது கூடுதல் தகவல்.
நிர்வாகம் வைத்த 4 முக்கியச் சவால்கள் (12 இலக்குகளின் சுருக்கம்)
இந்த மாபெரும் சம்பளத்தைப் பெற எலான் மஸ்க் கட்டாயம் அடைய வேண்டிய 4 தரமான நிதியியல் மற்றும் வர்த்தக இலக்குகள்:
1. சந்தை மதிப்பு இலக்கு (Market Cap Target):
தற்போது 1.5 டிரில்லியன் டாலராக இருக்கும் டெஸ்லாவின் சந்தை மதிப்பை, 10 ஆண்டுகளுக்குள் (2035 வரை) 8.5 டிரில்லியன் டாலர் என்ற மாபெரும் இலக்கை எட்ட வேண்டும்.
இந்த இலக்கை அடைய, டெஸ்லா முதலில் 2 டிரில்லியன் டாலரை அடைய வேண்டும். அதன் பிறகு, 500 பில்லியன் டாலர் வீதம் 9 முறையும், இறுதியாக இரண்டு ஆண்டுகளில் தலா 1 டிரில்லியன் டாலர் மதிப்பில் உயர வேண்டும்.
2. $400 பில்லியன் EBITDA இலக்கு (Adjusted EBITDA):
நிதியியல் ரீதியாக, இந்த 10 ஆண்டுகளின் கடைசி இரண்டு வருடங்களில், நான்கு காலாண்டுகளிலும் தொடர்ச்சியாக 400 பில்லியன் டாலர் சரிசெய்யப்பட்ட இபிட்டா (EBITDA) அளவீட்டை எட்ட வேண்டும்.
(2024 இல் டெஸ்லாவின் EBITDA வெறும் 16 பில்லியன் டாலர் மட்டுமே இருந்தது. இறுதி இலக்கு தற்போதைய அளவை விட சுமார் 25 மடங்கு அதிகமாகும்.)
3. 20 மில்லியன் வாகன விநியோகம் (Vehicle Deliveries):
அடுத்த 10 ஆண்டுகளுக்குள் டெஸ்லா நிறுவனம் மொத்தமாக 20 மில்லியன் (2 கோடி) வாகனங்களை விநியோகம் செய்தாக வேண்டும்.
(டெஸ்லா 2025 ஜூன் வரை சுமார் 8 மில்லியன் வாகனங்களை மட்டுமே டெலிவரி செய்துள்ளது. எனவே, அடுத்த 10 ஆண்டுகளில் 12 மில்லியன் வாகனங்களை, அதாவது ஆண்டுக்குச் சராசரியாக 2 மில்லியன் வாகனங்களை உற்பத்தி செய்தால் மட்டுமே இந்த இலக்கை அடைய முடியும்.)
4. ரோபோக்கள் மற்றும் FSD சந்தாதாரர்கள் இலக்கு:
ரோபோ டெலிவரி: இந்த 10 ஆண்டுகளில் வாடிக்கையாளர்களுக்கு 1 மில்லியன் (10 லட்சம்) ரோபோக்களை (Optimus Robots) எலான் மஸ்க் விற்பனை செய்ய வேண்டும்.
FSD சந்தாதாரர்கள்: அடுத்த 10 வருடங்களில், டெஸ்லா குறைந்தது மூன்று மாதங்கள் சராசரியாக 10 மில்லியன் (1 கோடி) முழு-சுய-ஓட்டுநர் (Full Self-Driving – FSD) சந்தாதாரர்களைத் தொடர்ச்சியாகப் பெற வேண்டும்.
மற்ற நிபந்தனைகள்
எலான் மஸ்க் இந்த 10 ஆண்டுகளுக்கும் டெஸ்லாவின் CEO ஆகவோ அல்லது நிர்வாகத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட பதவியிலோ தொடர்ந்து இருக்க வேண்டும். பதவியை விட்டு வெளியேறினாலோ அல்லது பணிநீக்கம் செய்யப்பட்டாலோ, அவருக்கு ஒதுக்கப்படாத பங்குகள் கிடைக்காது. இதன் மூலம், மஸ்க் 2035 வரை நிறுவனத்தின் தலைமையில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரூ.88 லட்சம் கோடி சம்பளம் சும்மா கொடுப்பாங்களா! எலான் மஸ்க்-கிற்கு டெஸ்லா நிர்வாகம் வைத்த 4 தரமான செக்!


