AGR நிலுவைத் தொகை நிவாரண அப்டேட்: கம்பேக் கொடுக்கும் வோடஃபோன் ஐடியா பங்குகள்!

மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அளித்த முக்கிய அறிவிப்பைத் தொடர்ந்து, வோடஃபோன் ஐடியா லிமிடெட் (Vi) நிறுவனத்தின் பங்குகள் பங்குச் சந்தையில் எழுச்சியுடன் வர்த்தகமாகி வருகின்றன.

அமைச்சரின் முக்கிய அறிவிப்பு


வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் கூடுதல் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் (AGR) நிலுவைத் தொகை தொடர்பான நிவாரணப் பரிந்துரைகளை மத்திய அரசு அடுத்த சில வாரங்களில் இறுதி செய்யக்கூடும் என்று அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் தனது மதிப்பாய்வை முடித்து, நிவாரணப் பொதியின் சுருக்கத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிவிக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

எந்தவொரு நிவாரண நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு முன்பு, நிறுவனம் சார்பாக முறையான கோரிக்கைக்காக மத்திய அரசு காத்திருக்கிறது. மேலும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் சட்ட வரம்புகளையும் கவனமாக மதிப்பாய்வு செய்ய வேண்டியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

இந்த நிவாரணம் வோடஃபோன் ஐடியாவுக்கு மட்டுமே உரியது என்றும், இதேபோன்ற நிவாரணம் கோரும் வேறு எந்த நிறுவனமும் உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

பங்குச் சந்தை நிலவரம்
அமைச்சரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, வோடஃபோன் ஐடியா பங்குகள் பங்குச்சந்தையில் அதிகபட்சமாக 4% மேல் உயர்ந்து, ஜெட் மோடில் வர்த்தகமாகின.

கட்டுரை வெளியான அன்று, இன்ட்ரா-டேயில் பங்கு விலை ரூ.10.32 என்ற உச்சத்தை எட்டியது.

டிசம்பர் 2 செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில், பங்கு விலை 2.22% உயர்ந்து ரூ.10.15 ஆக வர்த்தகமானது.

கடந்த ஒரு வருடத்தில், ஆகஸ்ட் 14, 2025 அன்று குறைந்தபட்ச விலையான ரூ.6.12-இல் இருந்து, வெறும் மூன்று மாதங்களில் 81.05% உயர்ந்து நவம்பர் 14, 2025 அன்று ரூ.11.08 என்ற ஒரு வருட அதிகபட்ச விலையைத் தொட்டது.

உச்ச நீதிமன்ற உத்தரவு
கடந்த அக்டோபர் 27 அன்று உச்ச நீதிமன்றம், வோடஃபோன் ஐடியாவில் மத்திய அரசுக்குப் பங்கு இருப்பதால், அது 20 கோடி நுகர்வோரைப் பாதிக்கிறது என்றும், எனவே AGR நிலுவைத் தொகை தொடர்பான நிறுவனத்தின் மனுவை மறுபரிசீலனை செய்து பொருத்தமான முடிவை அரசாங்கம் எடுப்பது சரியாக இருக்கும் என்றும் கூறியது.

நவம்பர் 3 அன்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியபடி, வோடஃபோன் ஐடியா கூடுதல் AGR நிலுவைத் தொகை மற்றும் நிலுவையில் உள்ள முழு AGR நிலுவைத் தொகை இரண்டிலும் நிவாரணம் கோரியுள்ளது. இவை இரண்டிலும் மத்திய அரசு நிவாரணம் பரிசீலிக்கலாம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.