தமிழ்நாட்டில் சுமார் 20 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்து, செயற்கை நுண்ணறிவுடன் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க, கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து, தமிழக தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்ததாவது., தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்தையும் செயல்படுத்தும் பணிகள் நடைபெறுகிறது. அதற்காக எனது தலைமையில், தலைமைச் செயலாளர் மற்றும் அனைத்து துறை செயலாளர்கள் இணைந்த ஒருங்கிணைப்புக் குழுவை முதலமைச்சர் ஸ்டாலின் உருவாக்கியுள்ளார். இந்த குழு சார்பில், ஒப்பந்தங்களை முதலீடுகளாக மாற்ற ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி வருகிறோம். ஒப்பந்தங்கள் அனைத்தையும் முதலீடுகளாக மாற்றும் வகையில் சுமார் 70 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது.
முதலமைச்சர், வெளிநாடு சுற்றுப்பயணம் சென்று பெறப்பட்ட ஒப்பந்தங்கள் முற்றிலும் முதலீடுகளாக வரும் சூழல் உருவாகியுள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 20 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்து, செயற்கை நுண்ணறிவுடன் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க, கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.
ஃபோர்டு நிறுவனம் மீண்டும் சென்னையில் தொழிற்சாலை தொடங்குவதற்கான பணிகள் நடைபெறுகிறது. அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்” இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.




