இந்தியாவில், கடலுக்குள் அமைக்கப்படும் கண்ணாடி இழை கேபிள் கட்டமைப்பில், சர்வதேச நிறுவனங்களான கூகுள் மற்றும் மெட்டா ஆகியவை அதிக அளவு முதலீடு செய்கின்றன. இதனால், இங்கு ஏற்கனவே டேட்டா சேவைகளை வழங்கும் ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் டாடா கம்யூனிகேஷன் ஆகிய நிறுவனங்களுடன் நேரடி போட்டி நிலவும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
நடப்பாண்டின், முதல் காலாண்டில் கூகுள் நிறுவனம் மும்பையில் ப்ளூ-ராமன் சப்மெரின் கேபிள் சிஸ்டம் என்ற தகவல் தொடர்பு இணைப்பை தொடங்க உள்ளது. 218 டிபிபிஎஸ் திறனுள்ள இந்த இணைப்பு திட்டத்தின் மதிப்பு 400 மில்லியன் டாலர். இதில், இத்தாலியின் ஸ்பார்கிள் நிறுவனமும் முதலீடு செய்கிறது.
இதே போல், மெட்டா நிறுவனம் கடலுக்கு அடியிலான கேபிள் இணைப்பு திட்டத்தில் முதலீடு செய்ய திட்டப்பட்டுள்ளது. இதன் திறன் 500 டிபிபிஎஸ். இத்திட்டத்திற்கு மூன்று ஆண்டுகளில் 10 பில்லியன் டாலர் முதலீடு தேவைப்படும். நுகர்வோர் மற்றும் ‘ஏஐ’ நிறுவனங்களுக்கு இந்தியா முக்கியமான சந்தையாக உள்ளதால் மெட்டா நிறுவனம் இங்கு கடலுக்கு அடியிலான கேபிள் இணைப்பு திட்டத்தில் முதலீடு செய்கிறது.
கடலுக்கு அடியில் கேபிள் அமைக்கும் திட்டம் வேகமாக வளர்ந்து வருகிறது. 2016-20- ம் ஆண்டு காலத்துக்குள் 107 புதிய கேபிள்கள் அமைக்கப்பட்டன. இவற்றின் மதிப்பு 13.8 பில்லியன் டாலர். 2021 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை மேலும் 18 பில்லியன் டாலர் மதிப்பில் கடலுக்கு அடியில் கேபிள் அமைக்கப்படும் திட்டத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள, இந்தியா சாதகமான இடத்தில் உள்ளது.
மெட்டா நிறுவனத்தின் கேபிள் இணைப்பு குஜராத் அல்லது சென்னையை இணைக்கலாம். குஜராத்தில் மெட்டா நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நாட்டின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தரவு மையத்தை அமைத்து வருகிறது. இதன் திறன் ஒரு ஜிகா வாட். சென்னையில் ரிலையன்ஸ்-ன் கூட்டு நிறுவனம் ஏற்கனவே ஒரு தரவு மையத்தை இயக்கி வருகிறது. கடலுக்கு அடியிலான கேபிள் நெட்வொர்க்கை தரைப்பகுதியில் உள்ள கட்டமைப்புடன் இணைக்கும் தரவு மையமாக லேண்டிங் ஸ்டேஷன் செயல்படுகிறது.
2025 மார்ச் மாதத்திற்குள் ஜியோ, ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள், ஆப்பிரிக்கா பியர்ல்ஸ், இந்தியா ஏசியா எக்ஸ்பிரஸ் மற்றும் இந்தியா ஐரோப்பா எக்ஸ்பிரஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து கடலுக்கு அடியிலான மூன்று கேபிள் திட்டங்களை தொடங்க திட்டமிட்டுள்ளன. இதன் மூலம் இந்நிறுவனங்களின் தற்போதைய திறன் நான்கு மடங்குக்கு மேல் அதிகரிக்கும். கடலுக்கடியில் அமைக்கப்படும் கண்ணாடி இழை கேபிள் இணைப்பு மூலம் தரவு பரிமாற்றம் அதிவேகத்தில் இருக்கும். இந்தியாவின் லாபகரமான சந்தையை மையமாகக் கொண்டு இத்திட்டத்தில் முதலீடு செய்ய செய்வதில் போட்டி நிலவுகிறது. உலக அளவில், தகவல் தொடர்புக்காக கடலுக்கு அடியில் அமைக்கப்படும் கேபிள் நெட்வொர்க் சந்தையின் மதிப்பு கடந்த ஆண்டு 27.57 பில்லியன் டாலராக இருந்தது. இது இந்திய மதிப்பில் சுமார் 2,35,000 கோடி ரூபாயாகும்.




