108 வருட பழமையான நிறுவனம்… வைரலாகும் ஆனந்த் மஹிந்திராவின் பதிவு!

108 வருட பழமையான சோப் நிறுவனம் குறித்த, ஆனந்த் மஹிந்திராவின் ஏக்கமான எக்ஸ் தள பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

100 சதவீதம் சந்தன எண்ணெயை பயன்படுத்தி உற்பத்தியாகும் உலகின் ஒரே சோப் என்று கூறப்படும், ‘மைசூர் சாண்டல் சோப்’ 1916 முதல் கிடைக்கிறது.

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, சமீபத்திய தனது எக்ஸ் பதிவில், கர்நாடகா சோப்ஸ் அண்ட் டிடர்ஜென்ட்ஸ் லிமிடெட் (KSDL) தயாரிக்கும், பாரம்பரிய பிராண்டான மைசூர் சாண்டல் சோப்பைப் பாராட்டினார். தூய சந்தன எண்ணெயைப் பயன்படுத்துவதற்குப் பிரபலமான சோப்பு, 1916 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து இந்திய குடும்பங்களில் பிரதானமாக உள்ளது.

அரசுக்கு சொந்தமான, கர்நாடகா சோப்ஸ் அண்ட் டிடர்ஜென்ட்ஸ் லிமிடெட் (KSDL) நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களின் நிலையான தேவையை பூர்த்தி செய்ய, தினமும் சுமார் 10 முதல் 12 லட்சம் சோப்புகளை உற்பத்தி செய்கிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி ஒரு காலத்தில் சோப் பிராண்டின், பிராண்ட் அம்பாசிடராக இருந்தார்.

சோப்பின் உற்பத்தி முறையைக் காண்பிக்கும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா, “இந்த வீடியோவைப் பார்த்ததும் ஏக்கத்தால் மூழ்கினேன், நிறுவனம் இவ்வளவு காலம் நிலையாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அதை மீண்டும் வாங்கி பாரம்பரியமான நறுமணத்தை சுவாசிக்கப் போகிறேன், என்று பதிவிட்டு இருந்தார்.

ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வீடியோ, பெங்களூருவைச் சேர்ந்த ஷிவா ராய் என்பவரால் உருவாக்கப்பட்டது. இன்ஸ்டாகிராமில், இந்த வீடியோ 23.8 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

ஆனந்த் மஹிந்திராவின் எக்ஸ் பதிவு ஏற்கனவே ஐந்து லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.அந்த பதிவுக்கு பதிலளித்த ஒரு பயனர், “உங்கள் டெஸ்டோஸ்டிரோன் அளவை எதிர்மறையாக பாதிக்கும் எந்த இரசாயனமும் இல்லாமல் கிடைக்கும் சிறந்த சோப்புகளில் ஒன்று மைசூர் சாண்டல். ஒவ்வொரு இந்தியனும் அதனை ஒருமுறையாவது முயற்சிக்க வேண்டும்.! என்று கூறியுள்ளார்.

மற்றொருவர்,”இது தனித்துவமானது, பழங்கால, மைசூர் மகாராஜா தனது விஞ்ஞானியை இங்கிலாந்துக்கு சோப்பு தொழில்நுட்பத்தை ஆய்வு செய்ய அனுப்பினார், பின்னர் இந்த தொழிற்சாலையை நிறுவினார். 60-களில் இருந்து, இது நல்ல வாசனையுடன் கூடிய குடும்பங்கள் பயன்படுத்தும் சோப்பாக இருந்து வருகிறது. இந்த தொழிற்சாலை பாதுகாக்கப்பட்டு, அதன் தயாரிப்புகள் இந்தியாவிலும், உலக அளவிலும் விற்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.