நாட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் 10 மற்றும் 20 ரூபாய் நோட்டுகளை பிளாஸ்டிக் நோட்டுகளாக தயாரிக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
ற்போது பயன்பாட்டில் உள்ள ரூபாய் நோட்டுகள், நீண்ட நாட்கள் பயன்படுத்தப்பட்ட பிறகு கிழிவதும், அழுக்கடைவதும் வழக்கமாக உள்ளது. இந்நிலையில், நீண்டகால பயன்பாட்டிற்கு உகந்த வகையில், பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளுக்கு மாறும் முடிவை ரிசர்வ் வங்கி எடுத்துள்ளது. பையாக்சியலி ஓரியண்டட் பாலிபுரோப்பிலீன் (Biaxially Oriented Polypropylene – BOPP) வகை பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் இந்த நோட்டுகள், காகித நோட்டுகளை விட 2 முதல் 4 மடங்கு அதிக நாட்கள் நீடிக்கும்.
மேலும், கிழிவது, ஈரமாவது மற்றும் அழுக்கடைவது போன்றவை குறைவாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், தெளிவான பாதுகாப்பு வடிவமைப்பு, ஹோலோகிராம், சிறப்பு மை உள்ளிட்ட மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெறுவதால், கள்ளநோட்டுகளை தயாரிப்பது மிகவும் கடினமாகும். ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர், இங்கிலாந்து உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் ஏற்கனவே பிளாஸ்டிக் நோட்டுகளைப் பயன்படுத்தி வருகின்றன.
இந்தியாவிலும், கடந்த 2013 மற்றும் 2015-ஆம் ஆண்டுகளில் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அவை நாடு முழுவதும் நடைமுறைக்கு வரவில்லை.தற்போது, உலகளாவிய டெண்டர் மூலம் பிளாஸ்டிக் தாள்களை கொள்முதல் செய்யும் நடவடிக்கையை RBI தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.




