சூரிய மின் சக்தியை ஊக்குவிக்கும் வகையில், ‘பிரதமரின் சூரிய வீடு, இலவச மின்சாரம் திட்டம்’ ரூபாய் 75,000 கோடிக்கும் மேற்பட்ட முதலீட்டில் தொடங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் வீட்டின் கூரையில் சோலார் பேனல்களை பொருத்திக் கொள்ளும் வீடுகளுக்கு, மாதம் 300 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.
நாட்டில் சூரிய மின்சக்தி பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சியாக, வீடுகளின் மேற்கூரையில் சோலார் பேனல்கள் (சூரிய மின்சக்தி தகடுகள்) பொருத்துவதற்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது. அரசு மானியங்கள் கிடைப்பதன் மூலம் அதிகமான குடும்பங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் இப்போது மேற்கூரையில் சோலார் பேனல்களை பொருத்தி வருகின்றன.
இந்நிலையில் இத்திட்டத்தை ஊக்குப்பதற்காக, ‘பிரதமரின் சூரிய வீடு, இலவச மின்சாரம்’ என்ற திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டின் கூரையில் சூரிய மின்சக்தி தகடு பொருத்தும் இத்திட்டத்தை, அடிமட்ட அளவில் பிரபலப்படுத்தும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகள், பஞ்சாயத்துகள் ஊக்குவிக்கப்படும். இத்திட்டம் அதிக வருவாயை ஈட்டித் தரும், மின்சார செலவை குறைக்கும், மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும்.
குடியிருப்பு வீடுகளுக்கு, 1 கிலோவாட் முதல் 2 கிலோ வாட் வரை திறன் உள்ள சோலார் பேனல்கள் பொருத்த ரூபாய் 30,000 மானியம் வழங்கப்படும். கூடுதல் திறன் கொண்ட சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்துவோருக்கு கிலோவாட் ஒன்றுக்கு ரூபாய் 18,000 வீதம் வழங்கப்படும். மூன்று கிலோ வாட் திறனுக்கு அதிகமான அளவில் சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்துவோருக்கு, உச்சவரம்பாக ரூபாய் 78 ,000 மானியம் வழங்கப்படும்.
மாதமின் நுகர்வு சராசரியாக 150 யூனிட் வரை இருந்தால் ஒன்று முதல் இரண்டு கிலோவாட் திறன் உள்ள சூரிய சோலார் பேனல்கள் பொருத்தி ரூபாய் 30,000 முதல் ரூபாய் 60,000 வரை மானிய உதவி பெறலாம். மின் நுகர்வு மாதத்திற்கு சராசரியாக 150 யூனிட் முதல் 300 யூனிட் வரை இருந்தால் இரண்டு கிலோவாட் முதல் மூன்று கிலோவாட் வரை திறன் உள்ள சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்தி ரூபாய் 60,000 முதல் 78,000 வரையும் மானியம் பெறலாம். மாத சராசரி மின் நுகர்வு 300 யூனிட்டுக்கு மேல் உள்ளவர்கள் 3 கிலோ வாட் திறனுக்கு அதிக அளவிலான சோலார் பேனல்கள் பொருத்தினாலும், மானிய உச்சவரம்பு ரூபாய் 78,000 தான்.
‘பிரதமரின் சூரிய வீடு, இலவச மின்சார திட்டத்தின்’ கீழ் மானியம் பெற்று, தங்கள் வீடுகளின் மேற்கூரையில் சூரிய மின்சக்தி தகடுகளை பொருத்த விரும்புவோர் https://pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். மாநிலம், மாவட்டத்தை தேர்வு செய்து, மின் நுகர்வு எண், செல்போன் எண், இ-மெயில் முகவரியை பதிவு செய்ய வேண்டும். ஒப்புதல் கிடைத்ததும் வீடுகளில் சூரிய மின்சக்தி தகடு பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்.




