பெங்களூரு பனத்தூர் கிராமத்தில் உள்ள பிரம்மாண்ட வணிகக் கட்டிடத்தை, டிமார்ட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் ரூ. 106.2 கோடிக்கு வாங்கியுள்ளது. சுமார் 1.70 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த கட்டிடத்தின் அடித்தளம், தரைத்தளம் மற்றும் மூன்று மாடிகள் இதில் அடங்கும். 2026 ஏப்ரல் 13 அன்று பதிவு செய்யப்பட்ட இந்த ஒப்பந்தத்திற்காக ரூ. 2.12 கோடி முத்திரைக் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 387 கடைகளுடன் வேகமாக வளர்ந்து வரும் டிமார்ட் நிறுவனம், தனது வணிகத்தை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் இந்த மெகா முதலீட்டை பெங்களூரு ரியல் எஸ்டேட்டில் செய்துள்ளது.
பெங்களூருவில் உள்ள சொத்துப் பதிவு ஆவணங்களின்படி, பிரபல சூப்பர் மார்க்கெட் நிறுவனமான டிமார்ட்டின் தாய் நிறுவனமான ‘அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் லிமிடெட்’, பெங்களூருவில் ஒரு பிரம்மாண்ட வணிகக் கட்டிடத்தை ரூ. 106.2 கோடிக்கு வாங்கியுள்ளது.
இந்த மெகா ஒப்பந்தம் கடந்த 2026 ஏப்ரல் 13 அன்று அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக டிமார்ட் நிறுவனம் ரூ. 2.12 கோடி முத்திரைக் கட்டணமாகச் செலுத்தியுள்ளது. பல விற்பனையாளர்கள் கொண்ட ஒரு குழுவிடமிருந்து இந்தச் சொத்து வாங்கப்பட்டுள்ளதாக ஆவணங்கள் காட்டுகின்றன.இந்தக் பிரம்மாண்ட கையகப்படுத்தல் பெங்களூரு கிழக்கு பகுதியில் உள்ள வர்த்தூர் ஹோப்ளி, பனத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள ‘பிளாக்-ஏ’ என்ற வணிகக் கட்டிடம் தொடர்பானது ஆகும். இந்தக் கட்டிடம் சுமார் 1.70 லட்சம் சதுர அடி பரப்பளவைக் கொண்டது. இதனுடன் கிட்டத்தட்ட 43,560 சதுர அடிக்குச் சமமான பிரிக்கப்படாத நிலப் பங்கும் டிமார்ட் நிறுவனத்திற்குச் சொந்தமாகிறது. இதில் வாகன நிறுத்துமிட வசதிகளை உள்ளடக்கிய அடித்தளம், தரைத்தளம், முதல், இரண்டாம், மூன்றாம் தளங்கள் மற்றும் மொட்டை மாடி என முழு கட்டிடமும் அடங்கும்.
கடந்த 2002-ல் மும்பையில் தனது முதல் கடையைத் தொடங்கிய டிமார்ட் நிறுவனம், 2024 டிசம்பர் நிலவரப்படி இந்தியா முழுவதும் 387 கடைகளைக் கொண்டு பிரம்மாண்டமாக வளர்ந்துள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட இந்தியாவின் பல மாநிலங்களில் வீட்டு உபயோகப் பொருட்கள், மளிகை மற்றும் ஆடைகளை ஒரே கூரையின் கீழ் வழங்கி மக்கள் மத்தியில் இந்த நிறுவனம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதேபோல் டிமார்ட் நிறுவனத்தின் தலைவரான கோடீஸ்வர முதலீட்டாளர் ராதாகிஷன் தமானியின் மற்றொரு நிறுவனம், சமீபத்தில் மே 2026-ல் மும்பை வோர்லி பகுதியில் உள்ள ஒரு ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பை மாத வாடகை ₹27.5 லட்சத்திற்கு குத்தகைக்கு விட்டுள்ளது. இது அந்த நகரின் மிக விலையுயர்ந்த வாடகை ஒப்பந்தங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மேலும், பன்வேல் பகுதியில் அதானி நிறுவனத்திடமிருந்து ஒரு பிரம்மாண்ட கிடங்கை மாத வாடகை ₹20.20 லட்சத்திற்கு 28 ஆண்டுகள் குத்தகைக்கு டிமார்ட் எடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.




