இந்தியாவில் தாராளமயமாக்கல் கொள்கை அமலுக்கு வந்த பிறகு, வேலைவாய்ப்பும் தனிநபர் வருமானமும் அதிகரித்தது. இதனால் நம் நாட்டு பொருளாதாரத்தின் முக்கிய உந்து சக்தியாக, ரியல் எஸ்டேட் விளங்குகிறது.
குறிப்பாக நகரமயமாக்கமும், தனிநபர் வருமானமும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்திய பொருளாதாரத்தில் வீட்டு வசதி துறை முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த சூழ்நிலையில் கடந்த 2020-இல் உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவியதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் ரியல் எஸ்டேட் துறை பெரும் பின்னடைவை சந்தித்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கரோனா தாக்கத்திலிருந்து உலக நாடுகள் படிப்படியாக மீண்டன.ஆனாலும் ரஷ்யா- உக்ரைன் போர், பணவீக்கம், மூலதன செலவு அதிகரிப்பு என உலக நாடுகள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. இதனால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய நெருக்கடிக்கு மத்தியிலும், இந்திய பொருளாதாரம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டி வருகிறது.
இதுபோல இந்திய ரியல் எஸ்டேட் துறை, 2023-ல் வளர்ச்சி பாதைக்கு திரும்பி உள்ளது. இந்த ஆண்டில் புதிய கட்டுமான திட்டங்கள் கணிசமான அளவில் அறிமுகம் செய்யப்பட்டன. குடியிருப்புகளின் விற்பனையும் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியை எட்டியது.
நாடு முழுவதும் 2023- ஆம் ஆண்டின் முடிவில் டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத்,புனே ஆகிய ஏழு முக்கிய நகரங்களில் புதிய குடியிருப்புகள் விற்பனை 15 ஆண்டுகளில் இல்லாத அளவில் 3 லட்சத்தை தாண்டி சாதனை படைத்துள்ளது. இவற்றின் மதிப்பு ரூபாய் 4.5 லட்சம் கோடியாக இருக்கும் எனத் தெரிகிறது. இதுபோல அலுவலகம் மற்றும் வர்த்தக கட்டிடங்கள் தொழிற்சாலை கட்டிடங்கள் காலி மனைகள் விற்பனையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. 2023 ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான 9 மாதங்களில் கிட்டத்தட்ட 2 லட்சம் குடியிருப்புகள் விற்பனையாகி உள்ளதாகவும், இது கடந்த 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 91% அதிகம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்திய பொருளாதார வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் இருந்து வருகிறது. பணவீக்கமும் கட்டுக்குள் இருக்கிறது. கட்டுமான நிறுவனங்கள், குறித்த நேரத்தில் திட்டங்களை முடித்துக் கொடுக்கின்றன. 2023- ஆம் ஆண்டில் கடன் வட்டி தொடர்ந்து அதிகரிக்கப்பட்ட நிலையில், 2024-ல் கடன் வட்டி 0.6 சதவீதம் முதல் 0.8 சதவீதம் வரை குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் குடியிருப்புகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. மேற்கண்ட காரணங்களால் 2024- ஆம் ஆண்டில் வர்த்தக கட்டடங்கள் மற்றும் குடியிருப்புக்கான தேவையும் விற்பனையும் தொடர்ந்து அதிகரிக்கும் என, இத்துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்திய ரியல் எஸ்டேட் சந்தை மதிப்பு கடந்த ஆண்டில் சுமார் 40 லட்சம் கோடியாக இருந்தது. இது வரும் 2030-ல் 83 லட்சம் கோடியாக (ஒரு ட்ரில்லியன் டாலர்) ஆகவும், வரும் 2047-இல் 483 லட்சம் கோடியாகவும் அதிகரிக்கும் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) ரியல் எஸ்டேட் துறையின் பங்கு கடந்த ஆண்டில் 7.3 சதவீதமாக இருந்தது. இது வரும் 2047-ல் 15.5 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.




