தூத்துக்குடியில் தலைமுறை தலைமுறையாக சங்கு குளித்தல் தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள், உயிரைப் பணயம் வைத்து கடலுக்குள் இறங்கி வாழ்வாதாரத்தை ஈட்டி வருகின்றனர்.
ஒருகாலத்தில் உலகப் புகழ்பெற்ற முத்துக்குளி மற்றும் சங்கு குளித்தல் தொழிலின் மையமாக விளங்கிய தூத்துக்குடியில், இன்றும் பலர் உயிரைப் பணயம் வைத்து கடலுக்குள் இறங்கி வாழ்வாதாரத்தை ஈட்டி வருகின்றனர். நவீன தொழில்நுட்ப வசதிகள் அறிமுகமானாலும், இந்தத் தொழிலில் உள்ள அபாயங்கள் முழுமையாகக் குறையவில்லை. தலைமுறை தலைமுறையாக இந்தத் தொழிலைத் தொடர்ந்து வரும் தொழிலாளர்கள், பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
பாரம்பரிய முத்துக்குளித்தல் முறையில், முத்துக்குளிப்பவர் இடுப்பில் கயிறு கட்டிக்கொண்டு கனமான கல்லின் உதவியுடன் கடலுக்குள் இறங்குவார். அந்தக் கயிற்றின் மறுமுனையை படகில் இருக்கும் அவரது மச்சான் (மனைவியின் சகோதரர்) பிடித்திருப்பார். “அது தனது சகோதரியின் தாலிக் கயிறு என்ற எண்ணத்தோடு அந்தக் கயிற்றைப் பிடித்திருப்பார்” என்பது இந்தத் தொழிலில் நிலவி வரும் நம்பிக்கையாகும்.
இதுகுறித்து தூத்துக்குடியில் சங்கு குளித்தல் தொழிலில் ஈடுபட்டு வரும் ஜி. ஸ்டாலின் கூறுகையில், “எனது சொந்த ஊர் சாயல்குடி அருகேயுள்ள மூக்கூர். இருப்பினும் பல ஆண்டுகளாக தூத்துக்குடியில் சங்கு குளித்தல் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். முன்னொரு காலத்தில் தூத்துக்குடி ‘முத்துக்குளி துறைமுகம்’ என்ற பெயரில் உலகப் புகழ் பெற்றிருந்தது. அப்போது கடலுக்குள் சென்று சிப்பிகளை சேகரித்து, அதிலிருந்து கிடைக்கும் முத்துக்களை அரசரிடம் ஒப்படைப்பார்கள். அதற்குப் பதிலாக மக்களுக்கு தானியங்களும், அன்றாட தேவைக்கான பொருட்களும் வழங்கப்பட்டன.
காலப்போக்கில் முத்துக்குளித்தல் தொழில் குறைந்ததைத் தொடர்ந்து, சங்கு சேகரிக்கும் தொழில் முக்கியத்துவம் பெற்றது. அரசின் அனுமதியுடன் கடலுக்குள் இறங்கி சங்குகளை சேகரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இது மிகுந்த உடல் உழைப்பும் உயிர் ஆபத்தும் நிறைந்த தொழிலாகும்.
ஆரம்ப காலங்களில் எந்தவித ஆக்சிஜன் வசதியும் இல்லாமல், மூச்சை அடக்கிக்கொண்டு 6 முதல் 10 மீட்டர் ஆழம் வரை நீந்திச் சென்று சங்குகளை சேகரிப்போம். சுமார் 7 முதல் 8 கிலோ எடையுள்ள கல்லின் உதவியுடன் கடலடிக்குச் சென்று, மூச்சு முடிவதற்குள் சங்குகளை எடுத்துக்கொண்டு மீண்டும் மேலே வர வேண்டும்.
இந்தப் பணியின் போது காதுத் திரை கிழிதல், மூக்கு மற்றும் முகத்தில் ரத்தக்கசிவு உள்ளிட்ட கடுமையான உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவது வழக்கமாக இருந்தது. பலர் உயிரிழந்த சம்பவங்களும் நடந்துள்ளன.
பின்னர் SCUBA ஆக்சிஜன் கருவிகள் அறிமுகமானதால் தொழிலாளர்களின் பாதுகாப்பு ஓரளவு மேம்பட்டுள்ளது. இருப்பினும் அனைத்து தொழிலாளர்களுக்கும் தனித்தனி ஸ்கூபா கருவிகளை அரசு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம்.
கடலுக்குள் பணியாற்றும் போது இடுப்பில் கட்டப்பட்ட பாதுகாப்புக் கயிறு மூலமாக மேலிருப்பவர்களுடன் சிக்னல் பரிமாறிக்கொள்வோம். படகில் இருப்பவர்கள் கயிறை இழுப்பதன் மூலம் அவசர தகவலை தெரிவிப்பார்கள். அதேபோல், தொழிலாளர்களும் மிதவை மூலம் மேலிருப்பவர்களுக்கு தேவையான தகவல்களை தெரிவிப்பார்கள்.
மேலும், கடலடியில் இயல்பாக நிற்க இடுப்பில் 3 முதல் 4 கிலோ எடையுள்ள வெயிட்டை கட்டிக்கொள்வது அவசியம். பணியை முடித்த பிறகு அந்த எடையை அகற்றினால், ஆக்சிஜனின் மிதவைத் தன்மையால் எளிதாக மேலே வர முடியும்” என்றார். கடந்த 15 ஆண்டுகளாக சங்கு குளித்தல் தொழிலில் ஈடுபட்டு வரும் ஜி. ஸ்டாலின், அதே நேரத்தில் மாணவர்களுக்கு தற்காப்புக் கலை பயிற்சியாளராகவும் செயல்பட்டு வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “22 வயதில் தற்காப்புக் கலையை கற்றேன். அந்தக் கலை அழியாமல் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் கடந்த ஐந்து ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளித்து வருகிறேன். என்னிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள் உலக சாதனை நிகழ்வுகள், சி.எம். டிராபி, மண்டல மற்றும் பள்ளி அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் வென்றுள்ளனர். வரவிருக்கும் போட்டிகளுக்காக தற்போது அவர்களை தீவிரமாகத் தயார்படுத்தி வருகிறேன்” என்றார்.




