நகரமயமாக்கல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் பாதுகாப்பான மற்றும் நஞ்சில்லா உணவின் மீதான மக்களின் ஆர்வமும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதன் விளைவாக வீட்டின் மொட்டை மாடியையே சிறிய காய்கறி தோட்டமாக மாற்றும் மாடித்தோட்டம் முறை வேகமாக பரவி வருகிறது. இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக தேங்காய் நார் கழிவு பயன்பாடு உருவெடுத்துள்ளது.
ஒரு காலத்தில் தென்னை தொழிலில் கழிவு பொருளாக கருதப்பட்ட தேங்காய் நார் கழிவு இன்று உலகம் முழுவதும் மாடித்தோட்டம், பசுமைக்குடில் விவசாயம் மற்றும் மண் இல்லா சாகுபடியில் முக்கிய இடம்பிடித்துள்ளது. குறிப்பாக பொள்ளாச்சி உள்ளிட்ட தென்னை வளம் மிக்க பகுதிகளில் உற்பத்தியாகும் தேங்காய் நார் கழிவுகளுக்கு வெளிநாடுகளில் பெரும் தேவை ஏற்பட்டுள்ளது.
தேங்காய் மட்டையிலிருந்து பிரித்தெடுக்கப்படும் நார் கழிவு, சுத்திகரிக்கப்பட்டு உலர்த்தப்பட்டு கோகோபீட் ஆக மாற்றப்படுகிறது. இது தண்ணீரை நீண்ட நேரம் தக்கவைக்கும் தன்மை கொண்டதுடன் செடிகளின் வேர்கள் சுவாசிக்க ஏற்ற சூழலையும் உருவாக்குகிறது. இதனால் மண் இல்லாமல்கூட காய்கறி, கீரை, பூச்செடிகள் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை எளிதாக வளர்க்க முடிகிறது.
அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் நகர்ப்புற வீடுகளில் அதிக எடை கொண்ட மண்ணை பயன்படுத்துவது சிரமமாக இருப்பதால் கோகோபீட் சிறந்த மாற்றாக உள்ளது. இது எடை குறைவாக இருப்பதுடன் தண்ணீரை சேமிக்கும் திறன் அதிகம் என்பதால் குறைந்த அளவு நீரிலேயே செடிகள் ஆரோக்கியமாக வளரும்.
பழைய பிளாஸ்டிக் வாளிகள், சிமெண்டு பைகள், குரோ பேக்குகள் போன்றவற்றில் கோகோபீட், மண்புழு உரம் மற்றும் இயற்கை மண் ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய், பீர்க்கங்காய், கீரை வகைகள் உள்ளிட்ட பல காய்கறிகளை வளர்க்க முடியும்.
அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் வளைகுடா நாடுகளில் பசுமைக்குடில் விவசாயம் மற்றும் மண் இல்லா சாகுபடியில் கோகோபீட் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இயற்கை வளங்களை பாதுகாக்கும் நோக்கில் பல நாடுகள் இதற்கு முன்னுரிமை அளித்து வருகின்றன.
பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் தயாரிக்கப்படும் கோகோபீட், 5 கிலோ எடையுள்ள சுருக்கப்பட்ட கட்டிகளாக தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் போக்குவரத்து செலவு குறைவதுடன் வெளிநாடுகளில் பயன்படுத்துவதும் எளிதாக உள்ளது.
தேங்காய் நார் கழிவு தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி தொழில் மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. மட்டை உரித்தல், நார் பிரித்தல், உலர்த்துதல், சுத்திகரித்தல், பிளாக் தயாரித்தல், ஏற்றுமதி போன்ற பல்வேறு கட்டங்களில் கிராமப்புற மக்களுக்கு நிலையான வருமானம் கிடைக்கிறது.
மழைக்காலங்களில் நார் கழிவுகளை உலர்த்த முடியாததால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. மேலும் தென்னை மரங்களை தாக்கும் பூச்சி நோய்கள் மற்றும் தேங்காய் வரத்து குறைவு காரணமாக மூலப்பொருள் விலை உயர்ந்து வருவது தொழில்துறைக்கு சவாலாக உள்ளது.
மாடித்தோட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் தோட்டக்கலை துறை மானிய விலையில் காய்கறி விதைகள், குரோ பேக்குகள் மற்றும் பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதேபோல் கோகோபீட் உற்பத்தியாளர்களுக்கு நவீன இயந்திரங்கள், சேமிப்பு வசதிகள் மற்றும் ஏற்றுமதி ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டால் இந்த துறை மேலும் வளர்ச்சியடையும் என உற்பத்தியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.




