“தொழில் மற்றும் வர்த்தக பயன்பாட்டிற்கான எல்.பி.ஜி. விநியோகத்தின் மீதான அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படுகிறது” என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொழில் மற்றும் வர்த்தக பயன்பாட்டிற்கான எல்.பி.ஜி. விநியோகத்தின் மீதான அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படுகிறது. மேற்கு ஆசிய நெருக்கடிக்கு முன்பாக இருந்த நிலைக்கு விநியோகம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், நெருக்கடியின் தொடக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மொத்த எல்பிஜி விநியோகம், நெருக்கடிக்கு முந்தைய நுகர்வு அளவுகளில் 50% அளவுக்குத் தளர்த்தப்பட்டுள்ளது. இது வர்த்தக மற்றும் தொழில் நுகர்வோருக்கு பயன் அளிக்கும்.
மேற்கு ஆசிய நெருக்கடியின் போது, உள்நாட்டு எல்பிஜி உற்பத்தியை அதிகரிப்பதற்காக, அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
உள்நாட்டு எல்பிஜி இருப்பு பாதிக்கப்படாமல் இருப்பதையும், மொத்த உள்நாட்டு எல்பிஜி உற்பத்தி ஒரு நாளைக்கு 40 டி.எம்.டி.க்குக் குறையாமல் பராமரிக்கப்படுவதையும் உறுதிசெய்து, எல்பிஜி அல்லாத பயன்பாடுகளுக்கான சி3-சி4 வகைகளின் மேம்படுத்தப்பட்ட ஒதுக்கீடு செயல்படுத்தப்படும்.
அதேசமயம், திறமையான திட்டமிடல் மற்றும் விநியோக மேலாண்மையை எளிதாக்குவதற்காக, வணிக மற்றும் தொழில்துறை எல்பிஜி நுகர்வோர் குறித்த விரிவான தரவுகளைத் தொடர்ந்து பராமரிக்குமாறு எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களுக்கு அரசு அறிவுறுத்துகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




